கடந்த ஐந்து ஆண்டுகளில் காவல்துறை காவலில் இருந்த 79 பேர் உயிரிழப்பு
2020 முதல் 2025 மே மாதம் வரையிலான காலப்பகுதியில், காவல்துறை காவலில் (police custody) இருந்த 79 பேர் உயிரிழந்துள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 49 பேர் காவல் நிலைய அறைகளில் (cells) இருந்தபோது உயிரிழந்தனர். மற்ற 30 பேர், சந்தேக நபர்களைக் கைது செய்த பின்னர் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டெடுப்பதற்காக அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட மோதல்கள் உள்ளிட்ட காவல்துறை நடவடிக்கைகளின் போது உயிரிழந்தனர்.
சந்தேக நபர்கள் உயிரிழந்த சம்பவங்கள்
இதன்படி, இந்த ஐந்தாண்டு காலத்தில் காவல்துறை காவலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 79 ஆகும். இந்த மாதம், ஹோமாகம மற்றும் கொபெய்கானே உள்ளிட்ட பகுதிகளில், காவல்துறை காவலில் இருந்த இரு சந்தேக நபர்கள் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பல காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்; மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
காவலில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், காவலில் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், காவல்துறைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சில விசேட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (Bar Association of Sri Lanka), இத்தகைய உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, ஹோமாகம சம்பவம் தொடர்பாக தற்போது விளக்கமறியலில் உள்ள அல்லது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளிடம், வரும் நாட்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |