2025 இல் வரலாற்று சாதனை படைத்த கொழும்புத் துறைமுகம்
கடந்த ஆண்டில் கொழும்புத் துறைமுகத்தில் கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை, துறைமுக வரலாற்றிலேயே மிக அதிகபட்சமான எண்ணிக்கையாக பதிவாகியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025ஆம் ஆண்டில் கையாளப்பட்ட மொத்த கொள்கலன்களின் எண்ணிக்கை 8,290,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கொழும்புத் துறைமுகத்தில் உள்ள முனையங்களான, துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான ஜய கொள்கலன் முனையம், கிழக்கு கொள்கலன் முனையம், சீன நிறுவனமான SAGT முனையம் மற்றும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான CICT முனையம் ஆகியவற்றின் கூட்டுச் செயற்பாடாகும் என அமைச்சு விளக்கியுள்ளது.
7.6 மில்லியன் கொள்கலன்கள்
2024ஆம் ஆண்டில் கொழும்புத் துறைமுகத்தில் 7.6 மில்லியன் கொள்கலன்கள் கையாளப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டில் அது 6 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த சாதனைமிக்க செயற்பாட்டைப் பாராட்டுவதற்காக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தலைமையில் இலங்கை துறைமுக அதிகார சபையின் கிழக்கு முனையத்தில் விசேட நிகழ்வொன்று நடைபெற்றது.
மேலும், கொழும்புத் துறைமுகம் ஒரு மையத் துறைமுகமாக தனது நிலையை மேலும் பலப்படுத்திக் கொண்டு, 2026ஆம் ஆண்டில் மீள் ஏற்றுமதி மற்றும் விநியோகச் சங்கிலி வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
துறைமுக அதிகார சபை
அதேபோல், 2026ஆம் ஆண்டில் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கிழக்கு மற்றும் மேற்கு கொள்கலன் முனையங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதன் மூலம், 2026இல் இன்னும் பாரிய அளவிலான கொள்கலன்களைக் கையாள முடியும் என அமைச்சு எதிர்பார்க்கிறது.

2026ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரும் பங்களிப்பை வழங்கும் எனவும், தற்போது உலகின் முன்னனி கப்பல் நிறுவனங்கள் பல கொழும்புத் துறைமுகத்தின் செயல்பாடுகள் குறித்துத் தமது திருப்தியை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
இதன் மூலம் அந்த கப்பல் நிறுவனங்களும் கொழும்புத் துறைமுகத்தின் செயல்பாடுகளுடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 10 மணி நேரம் முன்