வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்
கட்டுமான பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்று வேலைக்கு செல்லாமல் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்த நிலையில் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளான இலங்கையர் ஒருவரை நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபரின் மனம் மற்றும் உடல் நிலை சரியில்லாததால், அவரை மீண்டும் அழைத்து வருவதற்காக தூதரகத்தின் தொழிலாளர் நலப் பிரிவை சேர்ந்த ஒரு அதிகாரியும் அவருடன் கொழும்புக்கு சென்றதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இலங்கைக்கு வருவதற்காக நேற்று (19) காலை டெல் அவிவ் விமான நிலையத்திற்கு வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளார்
மனநிலை பாதிக்கப்பட்ட அவரை கடந்த சில தினங்களாக பல இலங்கையர்கள் பாதுகாப்பாக கவனித்துக் கொண்டதாகவும், அவர்கள் அனைவருக்கும் தூதரகம் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.
அவரைத் தவிர, இஸ்ரேலுக்கு வந்து போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட மற்றொரு இலங்கையர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவரது கடவுச்சீட்டு தொலைந்து போனதால், அவருக்கு கட்டணம் வசூலிக்காமல் தற்காலிக கடவுச்சீட்டு வழங்க தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
சுட்டிக்காட்டிய தூதுவர்
இந்த இருவருடன், மது மற்றும் போதைப்பொருள் பாவனை காரணமாக நெருக்கடியை எதிர்கொண்ட 07 பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் குழுவில் ஒரு பெண்ணும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் 07 பேருக்கு மேலதிகமாக, மது அருந்திய பின்னர் குளியலறையில் வழுக்கி விழுந்து நிரந்தர ஊனமுற்ற ஒரு நபரும் இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், கடந்த காலங்களில் இஸ்ரேலில் உயிரை மாய்த்துக் கொண்ட இரண்டு இலங்கையர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
எனவே, மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு கடுமையாக அடிமையானவர்களை இஸ்ரேலில் வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று தூதுவர் கேட்டுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
