ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழாவில் சம்பந்தனுக்கும் நினைவஞ்சலி!
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழாவில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு விழா இன்று (20.09.2025) காலை 9.00 மணிக்கு சிறி ஜெயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது.
'உங்கள் கருத்தைப் பேசுங்கள், அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றாக நில்லுங்கள்' எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு நிறைவு விழா நடைபெற்று வருகிறது.
ஆனந்த சங்கரி பங்கேற்பு
இதன்போது, மறைந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த இரா. சம்பந்தன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவர் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் உள்ளிட்ட பல தமிழ் தலைவர்களுக்கும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, குறித்த விழாவில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி, நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுயூதீன் ஆகிய தமிழ் அரசியல் தலைவர்கள் கலந்துக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
