இலங்கையில் சுகாதாரத்துறையில் இருந்து விலகிய 850 சாதாரண வைத்தியர்கள்
இலங்கையில் கடந்த ஒரு வருடத்திற்குள் சுமார் 850 சாதாரண வைத்தியர்கள் சுகாதாரத்துறையில் இருந்து விலகியுள்ளமையை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சுகாதார அமைச்சிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து, இந்த ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், குறித்த வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பயிற்சிகளுக்காக வெளியேறுபவர்கள்
இதேவேளை, குறித்த காலப்பகுதியில், 274 விசேட வைத்திய நிபுணர்களும் நாட்டை விட்டு விலகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ கலாநிதி பட்டப்படிப்புகளை நிறைவுசெய்த 785 வைத்தியர்கள் எதிர்வரும் மாதங்களில் பயிற்சிகளுக்காக நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் தமக்கான பயிற்சிகளை நிறைவுசெய்ததன் பின்னர் மீண்டும் நாட்டை வந்தடைவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது வெளிநாடுகளில் 822 வைத்தியர்கள் பயிற்சிகளை பெற்றுவரும் நிலையில் அவர்களில் 632 பேர் மருத்துவ கலாநிதி பட்டப்படிப்புக்கான பரீட்சைகளுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.