மொட்டுவுடன் மீண்டும் இணைய வெளியேறியவர்கள் விதித்த நிபந்தனை
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் தவறைத் திருத்திக் கொண்டால் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவோம். தன்னிச்சையாக எடுத்த தீர்மானத்தால் கட்சி பிளவடைந்துள்ளது என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
அநுராதபுரம் பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முற்றிலும் பொய்யானது
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை வேட்பாளராகக் களமிறக்கக் கட்சி ஏகமனதாகத் தீர்மானித்ததாகக் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.
கடந்த மாதம் 29 ஆம் திகதி பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற நிறைவேற்று சபை கூட்டத்தில் ஆளும் தரப்பின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். கட்சியின் ஆதரவாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளே பெரும்பான்மையாகக் கலந்து கொண்டிருந்தனர்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாகவே எமக்கு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த வாக்குறுதிக்குப் பின்னரே நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டோம். இருப்பினும் ஒரு தரப்பினரது தன்னிச்சையான செயற்பாடுகளினால் தவறான தீர்மானம் எடுக்கப்பட்டது.
கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் தீர்மானத்துக்கு எதிராகக் கட்சி செயற்படும் போது ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். கட்சி எடுத்த தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று மகிந்த ராஜபக்சவிடம் பலமுறை வலியுறுத்தினோம்.
பெரமுன குறிப்பிடுவது நகைப்புக்குரியது
தம்மிக்க பெரேரா இறுதி நேரத்தில் போட்டியிட முடியாது என்று குறிப்பிட்டார். ஆகவே நாமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்கத் தீர்மானித்தோம் என்று பொதுஜன பெரமுன குறிப்பிடுவது நகைப்புக்குரியது.
நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது இவற்றை நாங்கள் எடுத்துரைத்தோம். ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் தவறை திருத்திக் கொண்டால் பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் இணைவோம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |