முல்லைத்தீவின் கடற்கரைப்பகுதியை உரிமை கோரும் வெளிநாட்டவர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை தியோநகர் கடற்கரைப்பகுதியை கடற்றொழிலாளர்கள் தொழில் செய்யமுடியாதவாறு கனடா நாட்டைச் சேர்ந்த தனியார் ஒருவர் உரிமை கோருவதால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் 2.5 கிலோமீற்றர் தூரத்தினை கையகப்படுத்தி பாரிய நிறுவனம் ஒன்றை அமைத்துள்ள தனியார் கடலுக்குள்ளும் உரிமை கோரிவருவதனால் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு சிலாவத்தை தெற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 16ஆவது இறங்குதுறையாக சிலாவத்தை தெற்கு தியோநகர் இறங்குதுறை காணப்படுகின்றது.
கடற்றொழிலுக்கு தடை
இந்தநிலையில் கடற்றொழிலினை நம்பி பலர் இங்கு வாழ்ந்து வருகின்றமையால் தியோநகர் கடற்கரையினையும் தனியார் உரிமை கோரிவருவதனால் இப்பகுதியில் கடற்றொழிலாளர்கள் ஒரு சிறு கொட்டில் கூட போடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் தற்போது கடலுக்குள்ளும் தங்களுக்கு சொந்தமான நிலம் காணப்படுவதாக தெரிவித்து கடற்கரையில் கடற்றொழில் நடவடிக்கையினையும் தடைசெய்து வருகின்றார்கள்
குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்ற இந்த பிரச்சினை காவல்நிலையம் வரை சென்று பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள் வரை சென்று இதுவரை தீர்க்கப்படாத நிலையில் கடற்றொழிலாளர்கள் இணைந்து மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்கள்.
இறால் பிடிக்கும் பருவகாலம்
இதேவேளை இலங்கையில் உள்ள கடற்கரையில் இலங்கைப் பிரஜைகள் தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று முல்லைத்தீவு கடலில் இறால் பிடிக்கும் பருவகாலம் காணப்படுவதால் வலையில் பட்ட இறால்களை வெய்யிலுக்கு மத்தியில் இருந்து தெரிந்து எடுக்கும் அவல நிலைக்கு கடற்றொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளதுடன் வெய்யிலுக்காக ஒரு தறப்பாளினை கூட கட்டமுடியாத நிலை காணப்படுகின்றது.
2.5 கிலோமீற்றர் தூரம் கொண்ட கடற்கரையில் வீச்சுவலை செய்யமுடியாது, தூண்டில் போட்டு மீன்பிடிக்க முடியாது, ஏரல் கிண்டமுடியாது ஒரு கொட்டில் போட முடியாது போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாக தெரிவித்தனர்
இந்த விடயத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அமைச்சு மற்றும் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்கள அதிகாரிகள் உடடியாக தலையிட்டு கடற்றொழிலாளர்களின் தொழில் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கவேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |