பருத்தித்துறை துன்னாலையில் நான்கு நாட்களாக இடம்பெறும் மோதல் - காவல்துறை,விசேட அதிரடிப்படை குவிப்பு
நான்கு நாள்களாக நீடிக்கும் மோதல்
பருத்தித்துறை துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாள்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 இற்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர் என நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
வாள்கள், கற்கள் மற்றும் போத்தல்களினால் மோதல்கள் இடம்பெறுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 7 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்துள்ளன என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
"நான்கு நாள்களுக்கு முன்னர் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாற்றமடைந்தது. அது பின்னர் கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.
காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை குவிப்பு
சம்பவத்தில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. சிலர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் மோதல்கள் தொடர்கின்றன.
இன்று மாலை வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெயர் குறிப்பிடப்பட்ட 25 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.
இன்று நண்பகல் 12.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை அடங்கியிருந்த மோதல் மீண்டும் இன்றிரவு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று காவல்துறையினர் கூறினர்.

