இலங்கையில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கூற்றுப்படி, மருத்துவக் கல்லூரிகளில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள 1,600 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது மருத்துவக் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 800 ஆசிரியர்கள் உள்ளனர்.
மருத்துவப் பட்டம் பெற்ற பேராசிரியர்கள், மூலம் மருத்துவக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும், தட்டுப்பாடு காரணமாக மருத்துவக் கல்வியை நடத்துவது கடினமான பணியாக மாறியுள்ளது என்றும் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
நாட்டை விட்டு வெளியேறும் பேராசிரியர்கள்
நாட்டில் 12 மருத்துவ பீடங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பீடங்களில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கடந்த வருடம் டிசெம்பர் மாதம் எமது நாடு மருத்துவக் கல்விக்கான உலகத் தரச் சான்றிதழைப் பெற்றதாகவும், மருத்துவப் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டால் இந்த சர்வதேசச் சான்றிதழையும் இழக்க நேரிடும் எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.
வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு கடும் அழுத்தங்கள்
தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மட்டுமே எங்கள் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளன என்றும், மருத்துவக் கல்விக்கான உலக அங்கீகாரச் சான்றிதழ் இந்தியாவுக்குக் கூட கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு கடும் அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு அதிகாரிகளிடம் யோசனை ஒன்றை கையளிப்பதற்கு தமது சங்கம் ஏற்பாடு செய்திருந்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.
