15 வருடங்களாகியும் கொடூரங்களுக்கான நீதி கிடைக்கவில்லை: சுமந்திரன் பகிரங்கம்
முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து 15 வருடங்கள் பூர்த்தியாகியும் இந்தக் கொடூரங்களுக்கான நீதி இன்னமும் கிட்டவில்லை என்ற பெரும் ஆதங்கத்தோடு இந்த வருடம் இந்த நினைவேந்தல் இடம்பெறுகின்றது என எம். ஏ. சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்தார்.
இன்று (18) முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தலில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “நினைவேந்தல் நடத்துவதற்கு கூட உரித்து சம்பந்தமான ஒரு கேள்விக்குறியோடு தான் இந்த வருடமும் நடைபெறுகின்றது.
ஆனாலும் எவ்விதமான தடைகள் இருந்தாலும் மக்கள் உணர்வெழுச்சியோடு இங்கே நடந்த கொடூரங்களின் நினைவுகளுடன் தமது உறவினர்களை நினைவுகூரும் முகமாக பெருவாரியாக திரண்டு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பது மனதிற்கு சாந்தியைத் தருகின்றது.
இதேபோல் எங்களுடைய மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான பொறிமுறை தேடப்பட வேண்டும். சர்வதேச மட்டத்திலே பல விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இந்த அவலத்திற்கு பொறுப்பானவர்கள் இன்னமும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலகாரணமாக தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்காமல் எங்களுக்காக ஒரு ஆளும் அலகை ஏற்படுத்தாமல் இருக்கின்ற நிலைமை தொடர்ச்சியாக எங்களுடைய தேசம் இந்த தீவிலே ஒரு சுதந்திரமான சம உரிமையுடன் வாழ்கின்ற அந்த செயற்பாட்டை தடுப்பதாக இருக்கின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |