22 வருடங்களின் பின்னர் சிக்கிய கொலைக்குற்றவாளி!
கடந்த 2002 ஆம் ஆண்டு தனது மனைவியின் சகோதரியின் கணவரை கொலை செய்தவர் 22 வருடங்களின் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருவிட்ட பிரதேசத்தில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
அப்போது 22 வயதுடைய சந்தேகநபர், கொலைச் சம்பவம் இடம்பெற்று 3 மாதங்களுக்குப் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சந்தேக நபருக்கு மரண தண்டனை
இதற்கிடையில், அவர் வெளிநாடு சென்றுவிட்டார். இரத்தினபுரி மேல் நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு சந்தேகநபர் வழக்கில் முன்னிலையாகாமல், வழக்குத் தொடரின் சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், வெளிநாட்டுக்கு சென்ற சந்தேக நபர் இந்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் நாட்டுக்கு வந்து, போபட் எல்ல - அகலவத்தை பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இரகசியமாக வசித்து வந்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து வந்து தலைமறைவு வாழ்க்கை
தலைமறைவாக வாழ்ந்துவரும் இந்த சந்தேக நபர் குறித்து காவல்துறை தலைமை ஆய்வாளர் ஜி..உதயசாந்தவுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக செயற்பட்ட காவல்துறையினர், குறித்த சந்தேக நபரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
இதன்படி, தனது மனைவியின் சகோதரியின் கணவரைக் கொன்ற சந்தேக நபர் 22 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |