முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
முல்லைத்தீவு மாவட்ட பண்ணையாளர்கள் மாடுகளுக்கான பண்ணைகளை பதிவு செய்து உச்ச பயன் பெற்றுக்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கிருஜகலா சிவானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்ற்கமைய அவர் விடுத்துள்ள கோரிக்கையில் பண்ணையாளர்கள் தமது மாட்டுப் பண்ணைகளை பதிவுசெய்ய வேண்டியதும் தங்களால் வளர்க்கப்படும் சகல மாடுகளுக்கும் காதுப்பட்டி பொருத்துதலும் மிக முக்கியமானதாக அறிவிக்கப்படுகின்றது.
இலங்கையிலுள்ள பண்ணைகளில் மாடுகளின் பண்ணைகள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது 2008ஆம் ஆண்டில் இருந்தே முக்கிய விடயமாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பல பண்ணையாளர்கள் இதில் ஆர்வமற்று இருந்து வருகின்றனர்.
பதிவு செய்வதனால் ஏற்படும் நன்மைகள்
மேலும் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களாக
தற்போது இணையத்தளம் மூலமும் இவை பதிவு செய்யப்பட வேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக விலங்குகளுக்கு காது இலக்கம் பொருத்தப்பட்டு பண்ணைகள் பதிவு செய்வதனால் பண்ணையாளர்களுக்கு
1. நாட்டிலுள்ள கால்நடைகளின் எண்ணிக்கையை சரியாக கணித்தல்
2. பண்ணைகளில் உள்ள விலங்குகள் பற்றிய பல்வேறு தகவல்களை ஆராய்ந்து பண்ணைகளின் முன்னேற்றத்தையும் உற்பத்தியையும் அதிகரிப்பதற்கான திட்டங்களை தீட்டுதல், நடைமுறைப்படுத்தல் மற்றும் இலாபம் ஈட்டச்செய்தல்
3. விலங்குகளை இடத்திற்கிடம் கொண்டுசெல்வதை இலகுவாக்கல்.
4. விலங்குகள் களவாடப்படுதலைத் தடுத்தல்
5. பண்ணைகளில் தேவையற்ற விலங்குகளை கழித்து விற்க நடவடிக்கை எடுத்தல்
6. இறைச்சிக்காக வெட்டப்படும் விலங்குகளுக்கான அனுமதி, ஏனைய மாவட்டங்களுக்கு கொண்டுசெல்வதற்கான அனுமதி போன்றவற்றுக்கு பதிவு அவசியம்
7. இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புக்களுக்காக இழப்பீடுகள் வழங்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது பண்ணைப்பதிவானது முக்கியமானதாக கருதப்படுகிறது.
8. வீதியோரங்களில் நின்று விபத்துக்களுக்குள்ளாகும் மாடுகளை இனம் காணுதல்
9. பயிரழிவு ஏற்படுத்தும் விலங்குகளை ஏலம் விடுதல் செயன்முறைக்கு முன் பண்ணையாளர்களை இனங்காண உதவுவதன் மூலம் குறித்த பண்ணையாளர்களிடம் விலங்குகளை ஒப்படைத்தல்/ மேலதிக நடவடிக்கையெடுத்தல் போன்ற விடயங்களுக்கும் அவற்றைவிட பதிவுசெய்த பண்ணையாளர்களுக்கு மட்டுமே திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகளை வழங்கும் திட்டமும் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை முழுவதும் நடைபெறும் வேலைத்திட்டம்
இதேவேளை நோய்க்கான சிகிச்சை வழங்குதல், விலங்குகளுக்கான தடுப்புமருந்தேற்றல், செயற்கைமுறை சினைப்படுத்தல் செய்தல், பண்ணைகளின் முன்னேற்றத்திற்கான கருத்திட்டங்களை வழங்குதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
அதனைவிட காதுப்பட்டி இல்லாத மாடுகளை அரச உடமையாக்கிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பமும் ஏற்பட வாய்ப்புள்ளது. விலங்குகளுக்கு காதிலக்கம் பொருத்தும் வேலைத்திட்டமானது இலங்கை முழுவதும் நடைபெறும் வேலைத்திட்டம் என்பதனாலும் ஒவ்வொரு விலங்கும் கட்டாயமாக காதுப்பட்டியுடன் காணப்பட வேண்டும் என்று வடமாகாண உயர்மட்ட அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பண்ணையாளர்கள் இதற்காக முக்கிய கவனத்தை எடுத்து செயற்பட வேண்டும் என்று மிக அவசியமாக வலியுறுத்தப்படுகின்றனர்.
பண்ணைகளை பதிவுசெய்வதற்கான கோரிக்கைகளினை கால்நடை வைத்திய அலுவலகங்களில் தெரியப்படுத்தி பதிவதற்கான படிவங்களைப் பெற்று முற்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
பண்ணைப் பதிவுச் சான்றிதழ்
தை மாதம் 31ஆம் திகதிவரை இக்கோரிக்கைக்கான படிவங்களை கால்நடை வைத்திய பணிமனைகளில் பெற முடியும். பெற்று அவற்றை பூரணப்படுத்தி மீண்டும் வைத்தியர்களிடம் இதனை கையளிக்க வேண்டும். கோரிக்கைக்கு அமைவாக காதுப்பட்டி பொருத்தும் வேலையை வைத்தியர்கள் அதற்கான அலுவலர்களை பயன்படுத்தி மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள்.
தங்களிடம் உள்ள மோட்டார் வாகனங்களிற்கு அவற்றின் ஆவணங்கள் எவ்வளவு முக்கியமோ அதேபோலவே இவ்விலங்குகளிற்கு இப்பண்ணைப் பதிவுச்சான்றிதழ் மிக முக்கியமானதாகும்.
எனவே இவற்றை கருத்திற்கொண்டு உடனடியாக செயற்படுமாறு பண்ணையாளர்கள் அனைவரையும் வினயமாக கேட்டுக்கொள்கிறேன்.” என முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப்பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
