மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து ஒரு வயது சிறுவன் உயிரிழப்பு!
திருகோணமலை - கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற குழியில் விழுந்து ஒரு வயது நிரம்பிய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
காக்காமுனை, கோழிமுட்டைகரச்சை பகுதியில் இந்த துயர சம்பவம் நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.
ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய, குடும்பத்தின் ஒரே ஒரு மகனான முகமது சையான் மிசாரி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மழைநீர் தேங்கி நிற்கின்ற குழி
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, வீட்டு முற்றத்தில், மாமரத்தில் கட்டப்பட்டிருந்த தொட்டிலுக்கு அருகில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், வீட்டுக்கு முன்னால் மழைநீர் தேங்கி நிற்கின்ற குழிக்குள், சென்று விளையாட முற்பட்டபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிண்ணியா பிரதேச, திடீர் மரண விசாரணை அதிகாரி வைத்தியசாலைக்கு வருகை தந்து, உரியவர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்து காவல்துறையினரிடம் அறிக்கையை கையளித்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாக, தற்போது இந்தப் பகுதியில் நீர் தேங்கி நிற்கின்றது.
உள்ளூராட்சி மன்றங்களால் கடந்த காலங்களில், மழைநீர் வடிந்தோட கூடிய முறையான வடிகான் அமைப்பு முறை இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படாமையால், இவ்வாறான அனர்த்தம் நிகழ்ந்திருப்பதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
