யாழில் நபர் ஒருவரின் கைவிரல் துண்டாடப்பட்ட சம்பவம்: மூவர் அதிரடி கைது
யாழில் (Jaffna) நபரொருவரின் கைவிரல் வெட்டப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபர்கள் இன்று (12.03.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 3ஆம் திகதி கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டில் நபரொருவரின் கைவிரல் வெட்டப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
இதையடுத்து, காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கைதான சந்தேக நபர்களிடமிருந்து வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைபொருள் கைபற்றப்பட்டதுடன் அவர்களது இரண்டு மோட்டார் சைக்கள்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்தி - பிரதீபன்
இளைஞர் மீது தாக்குதல்
இதேவேளை, யாழ். வட்டு வடக்கு, சித்தங்கேணி பகுதியில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவிக்கையில், “கடந்த மார்ச் மாதம் 03 ஆம் திகதி பிறந்தநாள் தினத்துக்கு எமது ஊரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கேக் வெட்டினோம்.
இது குறித்து வாட்ஸப் குழுவில் விவாதிக்கப்பட்ட போது அந்த குழுவில் இருந்த ஒருவர் அநாகரிகமான, வன்முறையை தூண்டும் சொற்பிரயோகத்தை வாட்ஸப் குழுமத்தில் பகிர்ந்திருந்தார்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவ தினத்தன்று (09) நாங்கள் மைதானத்தில் இருந்தவேளை அங்கு வந்து மிரட்டியதுடன், தனது வீட்டு பக்கம் வரச்சொன்னார்.
அங்கு சென்றவேளை அவரது குடும்பத்தாருடன் இணைந்து கம்பி உள்ளிட்ட பொருட்களால் என்மீது தாக்குதல் மேற்கொண்டனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்