யாழில் தயாரிக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகவும் சிறிய முச்சக்கர வண்டி
யாழில் தாத்தா ஒருவர் தனது பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக மிகவும் சிறிய முச்சக்கர வண்டி ஒன்றினை தயாரித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இந்த முச்சக்கர வண்டியானது முற்றிலும் சாதாரண முச்சக்கர வண்டி போலவே தோற்றமளிக்கிறது.
இதற்கு மோட்டார் பொருத்தினால் இயங்கக் கூடியவாறு இருக்கும் என இதனை உற்பத்தி செய்தவர் கூறுகின்றார்.
சிறுவர்களுக்கான முச்சக்கர வண்டி
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், ''இந்த முச்சக்கர வண்டி போல முச்சக்கர வண்டியை செய்து தருமாறு கூறி பலர் என்னை தொடர்பு கொண்டனர்.
அவ்வாறு தயாரித்து கொடுப்பதாக இருந்தால் என்னால் உடனடியாக தயாரித்து கொடுக்க முடியாது. சிறிது நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்.
ஏனெனில் முச்சக்கர வண்டிகள் திருத்தம் மற்றும் ஏனைய வேலைகளுக்கு எனது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அவர்களது வேலைகளை செய்துவிட்டு நேரம் கிடைக்கும் போதே இதனை செய்து கொடுப்பேன்.
இதனை செய்வதற்கு எனக்கு 25 நாட்கள் தேவைப்பட்டன. சிறுவர்களுக்கான ஏனைய வாகனங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் சிறுவர்களுக்கான முச்சக்கர வண்டி விற்பனை செய்யப்படுவதில்லை.
பல ஆண்டுகளுக்கு பாவனை
என்னுடைய வேலையும் முச்சக்கர வண்டி திருத்துவது தான். ஆகையால் முச்சக்கர வண்டியினை தயாரித்துள்ளேன்.
முழுவதும் கையாலேயே இந்த முச்சக்கர வண்டியினை தயாரித்து முடித்துள்ளேன். இதற்கு எனது மகன்களும் உதவி செய்தார்கள்.
கடையில் விற்பனை செய்யப்படும் சிறுவர்களுக்கான வாகனங்கள் பிளாஸ்டிக்கில் செய்வதால் அது இலகுவில் உடைந்துவிடும்.
ஆனால் இது இரும்பு மற்றும் தகரத்தினால் உருவாக்கப்பட்டது. ஆகையால் இலகுவில் உடையாது.
பல ஆண்டுகளுக்கு பாவனையில் இருக்கும். இதனை உருவாக்க எனது கூலி தவிர ஒரு இலட்சத்து எழுபத்து ஐயாயிரம் ரூபா செலவாகி இருக்கும்'' என்றார்.
இந்த முச்சக்கர வண்டியை பார்வையிடுவதற்கு ஏராளமானோர் வருகை தருவதாக கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |