ஹமாஸிடம் சிக்கிய இளம் ராணுவ வீரர் படுகொலை : பகிரங்கப்படுத்தியது இஸ்ரேல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முடிவின்றி தொடர்ந்துகொண்டுள்ள போரில் ஹமாஸ் அமைப்பினரால் காசாவுக்கு சிறை பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேல் இராணுவ வீரர்களில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
19 வயது நிறைந்த ஓஜ் டானியல் என்ற இளம் இராணுவ வீரனே ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டுள்ளார், இஸ்ரேலின் பீரங்கி படையில் பணியாற்றிய இவரை, சக பணியாளர்களுடன் சேர்த்து பயங்கரவாதிகள் பிடித்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில், இஸ்ரேல் இராணுவத்தின் 7-வது கவச படையின் 77-வது பட்டாலியனை சேர்ந்தவரான டானியல், காசாவில் வைத்து கொல்லப்பட்டு விட்டார் என ரகசிய தகவல் அடிப்படையில் இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது.
இறுதி சடங்குகள்
டானியலின் குடும்பத்தில் பெற்றோர் மற்றும் இரட்டை சகோதரிகள் உள்ளதாக தெரிவைக்கப்பட்டுள்ளது, மேலும் அவரது உடல் காசாவிலேயே உள்ளதாகவும் அங்கேயே உடலை அடக்கம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணுவத்தின் ரபி கூறியதன்படி, அவருக்கு இன்று மதியம் 2 மணியளவில் குவார் சபா இராணுவ மயானத்தில் வைத்து இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும், ஒரு வார காலம் நடைபெறவுள்ள இந்த இரங்கலில் டானியலின் குடும்பத்தினரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
போரானது தொடரும்
கடந்த ஒக்டோபரில் ஹமாஸ் அமைப்பு தொடங்கிவைத்த தாக்குதல் இன்று நான்கு மாதங்களை கடந்தும் முடிவின்றி தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது, குருதியை கொடையாக கேட்கும் யுத்த பூமியாக காசா மண் மாற்றம் கண்டு வருகின்றது.
ஆயிரக்கணக்கில் பெண்களும் குழந்தைகளும், உயிர் துறந்து, உடல் பாகங்களை இழந்து எப்போது போர்முடியும் என்று விடியலுக்காக காத்துக்கொண்டிருக்க, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் வரை போரானது தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்து செயற்பட்டு வருகிறார்.
இப்படி உக்கிரமடைந்து செல்லும் போரில், இன்று இஸ்ரேல் இராணுவம் தனது இளம் இராணுவ வீரரை இழந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |