ஹமாஸ் ஒரு அரசியல் இயக்கம் : ஐ.நா. அதிகாரியின் கருத்தால் வெடித்தது சர்ச்சை
ஹமாஸ் அமைப்பு ஒரு பயங்கரவாத குழு இல்லை, அது ஒரு அரசியல் இயக்கம் என ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரம் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளரான மார்ட்டின் கிரிபித்ஸ் கூறிய கருத்திற்கு கடும் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் இஸ்ரேல் வேளியிட்டுள்ளது.
ஹமாஸின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டதாக இஸ்ரேல் அண்மையில் அறிவித்தது, இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே மார்ட்டின் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஐ.நா. அமைப்பு ஒவ்வொரு நாளும் தரம் குறைந்து வருவதாகவும், ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற உண்மையை ஐ.நா. அதிகாரி மறுக்கிறார் எனவும் தெரிவித்தார்.
ஹமாசை ஒழிப்போம்
மேலும், ஹமாஸை ஓர் அரசியல் இயக்கம் என அழைக்கிறார், ஐ.நா.வின் பொது செயலாளர் அன்டனியோ குட்றசும் ஒன்றும் தெரியாதவர் போன்று தொடர்ந்து பாசாங்கு செய்து வருகிறார் என சாடினார்.
தவிரவும், ஹமாசை நாங்கள் ஒழிப்போம், யூதர்களின் ரத்தம் மலிவானதல்ல என்பதை அனைவரும் அறியச்செய்யவோம் என சீறினார்.
கடும் கண்டனம்
அவரை ஆதரிக்கும் முகமாக, ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான் கூறும்போது, நூற்றுக்கணக்கான குடிமக்களை கொடூர கொலை செய்தது பயங்கரம் இல்லையா? பெண்களை திட்டமிட்டு பலாத்காரம் செய்தது பயங்கரம் இல்லையா? யூத படுகொலை முயற்சி பயங்கரம் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளதுடன், கிரிபித்சை ஒரு பயங்கரவாத கூட்டாளி எனவும் கூறினார்.
ஹமாஸிற்கு ஆதரவாக ஐ.நா வின் தரப்பில் கூறப்பட்ட கருதத்திற்கு இஸ்ரேல் கடும் கண்டனங்களை ஐ.நா விற்கு எதிராக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |