மனிதகுலத்தின் இருப்பே ஆபத்தில்! கிளாட் விடுத்த அதிரடி எச்சரிக்கை
உலகப் புகழ்பெற்ற கிளாட் (Claude)செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கிய நிறுவனமான ஆந்த்ரோபிக், வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆரம்பப் பொதுப் பங்களிப்புக்கு விண்ணப்பித்துள்ளது.
இருப்பினும், இந்த நிதி ஏற்றத்திற்கு மத்தியில், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் இருப்பிற்கே ஒரு பேரழிவு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எச்சரித்துள்ளார்.
சான் பிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்ட ஆந்த்ரோபிக்(Anthropic) நிறுவனம், அடுத்த மாதம் அமெரிக்க வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையில் நுழையத் திட்டமிட்டுள்ளது.
100 பில்லியன் டொலர்
அங்கு அந்நிறுவனம் 'ANT' என்ற குறியீட்டின் கீழ் நாஸ்டாக்கில் பட்டியலிடப்படும். இந்த ஐ.பி.ஓ( Initial Public Offering) மூலம் 100 பில்லியன் டொலர் வரை திரட்ட முடியும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

இது, கடந்த ஜூன் மாதம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 86 பில்லியன் டொலர் திரட்டிப் படைத்த சாதனையை முறியடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆந்த்ரோபிக்கின் மொத்த சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் டொலரிலிருந்து 2 டிரில்லியன் டொலராக உயர்ந்து, டெஸ்லா போன்ற மாபெரும் நிறுவனங்களுக்கு இணையாக உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக இது திகழும்.
335 பக்கங்கள் கொண்ட அதிகாரப்பூர்வ பங்கு வெளியீட்டு அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆந்த்ரோபிக்கின் வருவாய் 16 பில்லியன் டொலர் களைத் தாண்டியுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 14 மடங்கு மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டுச் செலவு
இருப்பினும், அதிக ஆராய்ச்சி மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் காரணமாக, இந்தக் காலகட்டத்தில் நிறுவனம் 80.7 பில்லியன் டொலர் நிகர நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.

வெறும் ஐந்து வருட வரலாற்றைக் கொண்ட ஆந்த்ரோபிக் நிறுவனம், 2021-ஆம் ஆண்டில் அதன் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி (43), அவரது சகோதரி டேனியலா அமோடி (39) மற்றும் பிற கூட்டாளிகள் குழுவினரால் நிறுவப்பட்டது.
இந்த ஐ.பி.ஓ வெற்றி பெற்றால், இணை நிறுவனர்களின் பொருளாதாரம் பில்லியன் கணக்கில் அதிகரிக்கும்.
பொதுப் பாதுகாப்பைப் பணயம் வைத்து, நிறுவனம் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்வதைத் தடுப்பதற்காக, 'நீண்ட கால நல அறக்கட்டளை' எனப்படும் ஒரு சுயாதீன அறங்காவலர் குழுவை நியமிக்கும் அசாதாரணமான நடவடிக்கையையும் அந்நிறுவனம் எடுத்துள்ளது.
ஐ.பி.ஓ அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள 100 பக்க 'ஆபத்துக் காரணிகள்' ஆவணத்தில் உள்ள நிறுவனத்தின் எச்சரிக்கைகள், சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
மேலும், தீய சக்திகள் இரசாயன ஆயுதங்களைத் தயாரிக்க செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும், சர்வாதிகாரிகள் குடிமக்களை ஒடுக்குவதற்கு அத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும் உள்ள சாத்தியக்கூறுகளையும், மிக முக்கியமாக, செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் தன்னிச்சையாகச் செயல்பட்டு முழு மனித இனத்தையும் அழிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அவை வெளிப்படையாக வெளிப்படுத்தியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |