இன்று அதிகாலை கோர விபத்து : ஸ்தலத்திலேயே மூவர் பலி
இரண்டாம் இணைப்பு
அனுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளான கெப் வாகன சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பாதசாரிகள் குழு மீது வாகனம் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பியோடினார், பின்னர் இரண்டு பயணிகளுடன் அனுராதபுரம் - யாழ்ப்பாண சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
வாகனம் பழுதுபார்க்கும் கடையொன்றின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை 18 வயது நிரம்பிய குறித்த சாரதிக்கு சரியான சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏ20 பிரதான வீதியின் 13ஆம் மற்றும் 14ஆம் மைல் கற்களுக்கு இடையே இன்று (09) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் விசாரணை
இந்த விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 15 வயதுடைய மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீதே கெப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த கெப் ரக வாகனத்துடன் அதன் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |