ஏ9 வீதியில் இடம்பெற்ற கோர விபத்து : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் பலி!
கனகராயன்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டி - யாழ்ப்பாணம் வீதியின் பெரியகுளம் பகுதியில் இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற பாரவூர்தி எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
காவல்துறையினர் விசாரணை
இதன்போது, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் இருந்து பயணித்த ஒருவரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், முச்சக்கர வண்டியின் பின்னால் இருந்து பயணித்த பயணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கனகராயன்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |