நுவரெலியா விபத்தின் முதற்கட்ட விசாரணை - வெளிவந்த சாரதியின் செயல்
நுவரெலியா நானுஓயா பகுதியில் அதிவேகமாக பயணித்த பேருந்து ஒன்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் நேற்று (20) இரவு இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்திருந்தனர்
விபத்து குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து 62 வயதுடைய குறித்த பேருந்து சாரதியை கைது செய்திருந்தனர்.
காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது குறித்த சாரதி பேருந்தை கவனக்குறைவாக செலுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
தற்காலிகமாக தடை

அதிவேகமாக வந்த பேருந்து குன்றின் மீது சென்று நிறுத்தப்பட்டதில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் 41 பேரும் அவர்களது பெற்றோர்கள் உட்பட 53 பேரும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா குறுக்கு வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நானுஓயா டெஸ்போட் வழியாக சுற்று வீதியினை பயன்படுத்த வேண்டும் எனவும் இவ்வாறு மீறி செயற்படும் சாரதிகளுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுதாபம்

இதுவரை நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில், அதிகமாக கனரக வாகனங்களினால் ஏற்பட்ட விபத்துக்கள் மூலமே உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மிகவும் சரிவான இவ் வீதியில் அதிகளவு விபத்துக்கள் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மலையக நகர் பகுதிகளில் வெள்ளை கொடி பாதைமுழுதும் கட்டப்பட்டிருந்தது
