அம்பாறையில் துவிச்சக்கரவண்டியில் சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் நிந்தவூர் காவல்துறை பிரிவுகளில் இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துக்களில் இளைஞரொருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை, தரவை கோயில் பகுதிக்கு அருகாமையில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தொன்றில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த சகோதரர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கரவண்டியில் சென்ற சகோதரர்களில் ஒருவர் உயிரிழப்பு
கல்முனை, ஹனிபா வீதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரும் வழமைபோல் துவிச்சக்கர வண்டியில் கல்முனை சந்தைக்குச் சென்று கொண்டிருந்த போதே இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 23 வயதுடைய முஹம்மட் இக்பால் அகில் என்பவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது 19 வயதுடைய சகோதரரான பஸ்ஹாம் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கல்முனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நிந்தவூர் விபத்தில் மூவர் படுகாயம்
இதேவேளை, நிந்தவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை (23) இரவு இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகச் சென்ற இருவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மற்றுமொருவருடன் மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்தவர்களில் 58 மற்றும் 16 வயதுடைய இருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவ்விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் மற்றும் கல்முனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |