5 இலட்சத்திற்கு மேலான பணப் பரிவர்த்தனைகளுக்கு வரி எச்சரிக்கை
காணிகள், சொத்துகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களில் ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை உரிய கொடுப்பனவு முறைகளுக்கு அப்பால் பணமாகச் செலுத்தினால், நடைமுறையிலுள்ள வரி விதிகளின் கீழ் அதிக வரிப் பொறுப்பை எதிர்கொள்ள நேரிடும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவு முறைகளுக்கு அப்பால், ஐந்து இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பணமாகச் செலுத்தி மேற்கொள்ளப்படும் வணிகச் செலவுகள், வரிக்குட்பட்ட வருமானத்தைக் கணக்கிடும்போது கழிக்கக்கூடிய செலவுகளாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, ஒரு நிறுவனம் தனது செலவுக்காக 10 இலட்சம் ரூபாயைப் பணமாகச் செலுத்தினால், அந்தத் தொகையை வரிக் கழிவாகக் கருத முடியாது.
நடைமுறை மீறல்
இதனால், குறித்த நிறுவனத்தின் வரிக்குட்பட்ட இலாபம் 10 இலட்சம் ரூபாயால் அதிகரிக்கும். இதன்படி, 30 சதவீத நிறுவன வருமான வரி வீதத்துக்கு உட்பட்ட வணிக நிறுவனம், மேலதிகமாக மூன்று இலட்சம் ரூபாய் வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி விற்பனை உள்ளிட்ட சொத்துப் பரிவர்த்தனைகளில் கிடைக்கும் வரிக்குட்பட்ட இலாபத்தைக் கணக்கிடும்போதும் இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, ஒருவர் 90 இலட்சம் ரூபாய்க்குக் காணியொன்றைக் கொள்வனவு செய்து, பின்னர் அதனை ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தால், பொதுவாக அவரது இலாபம் 10 இலட்சம் ரூபாயாகக் கணக்கிடப்படும்.
எனினும், உரிய கொடுப்பனவு நடைமுறைகளை மீறி ஆரம்பக் கொள்வனவு பணமாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், 90 இலட்சம் ரூபாய் கொள்வனவுச் செலவை வரிக் கணக்கீட்டுக்காக ஏற்றுக்கொள்ளாமல் போகலாம்.
கட்டுப்பாடுகள்
அவ்வாறான சந்தர்ப்பத்தில், உண்மையான இலாபமான 10 இலட்சம் ரூபாய்க்குப் பதிலாக, முழுமையான ஒரு கோடி ரூபாய் விற்பனைத் தொகையின் அடிப்படையில் வரி கணக்கிடப்படக்கூடிய நிலை ஏற்படும் என அந்த அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

முறையான நிதிப் பரிவர்த்தனை வழிகளை ஊக்குவித்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் முறைசாரா நிதிச் செயற்பாடுகளை ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் கொண்டுவருதல் ஆகிய நோக்கங்களுக்காகவே இக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |