இலங்கையின் ETA விசா இணையத்தளம் செயலிழப்பு : வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப்பத்திரம் (ETA) வழங்கும் இணையத்தளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கணினித் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், முன்னதாகவே இலத்திரனியல் பயண அனுமதியைப் (ETA) பெற்றுக்கொள்ளாமலேயே விமானங்களில் பயணிப்பதற்கு மறுஅறிவித்தல் வரை தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம்
இது தொடர்பாகச் சிங்கப்பூரிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாகிஸ்தான், கமரூன், நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கானா, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கு இந்தத் தற்காலிகச் சலுகை பொருந்தாது

இந்தச் சலுகைக்குத் தகுதிபெறும் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அல்லது ஏனைய உரிய நுழைவாயில்களில் இலத்திரனியல் பயண அனுமதிப்பத்திரம் அல்லது சுற்றுலா விசாவைப் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
எனினும், இது இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான விசா நிபந்தனைகளை முழுமையாக நீக்குவதாக அமையாது, வருகை தரும் அனைத்துப் பயணிகளும் வழமையான குடிவரவுப் பரிசோதனை நடைமுறைகளுக்கும் உரிய விசா மற்றும் இலத்திரனியல் பயண அனுமதி நிபந்தனைகளுக்கும் உட்படுத்தப்படுவார்கள்.
நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான இறுதித் தீர்மானம் குடிவரவு அதிகாரிகளிடமே உள்ளது. கணினித் தொகுதி வழமைக்குத் திரும்பியதும், சாதாரண நடைமுறைகள் மீண்டும் நடைமுறைக்கு வரும்போது அது குறித்துச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |