அனோஜனின் விடுதலைக்காக தலையிட்ட ஜனாதிபதி ஞானசாரரை விடுதலை செய்ய முடியாதா... நாமல் கேள்வி
அரசியல் நோக்கங்கள் மற்றும் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செயற்படுகிறார் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் மத நிந்தனை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனோஜனை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியினால் நேரடியாக தலையீடு செய்ய முடியுமாயின் ஞானசார தேரரை ஏன் விடுதலை செய்ய முடியாது என அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் பரபரப்பு : வெளிநாட்டில் மனைவிக்கு சித்திரவதை : குழந்தைகளுடன் வாவியில் குதிக்க முயன்ற தந்தை
சுற்றுலாத்துறை அமைச்சு
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. எனினும் அந்த ஒதுக்கீடு முறையாக பயன்படுத்தப்படவில்லை.
சமூக மட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அரச நிதியை சேமித்துள்ளோம் என்று குறிப்பிடுவதால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்காது.

பிளவுபடாத வெளிவிவகார கொள்கையை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இலங்கையின் கடற்பரப்பில் ஈரான் நாட்டு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தக் தாக்குதலின் பின்னணியை அரசாங்கம் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் முன்கூட்டியதாகவே அறிந்திருந்ததா என்பது எமக்குத் தெரியவில்லை.
வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 2025 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் இந்த விடயமே குறிப்பிடப்பட்டது. இருப்பினும் எந்த ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவில்லை.
ஞானசார தேரரின் விடுதலை
சீனாவுடன் விசேட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக அரசாங்கம் குறிப்பிட்டது. இருப்பினும் அந்த ஒப்பந்தங்களுக்கு அமைய எவ்வித அபிவிருத்தி கருத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
வெளிநாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்கு முன்னர் சீனா, அமெரிக்கா, ஜேர்மன் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

சவுதி அரேபியாவில் மத அவமதிப்பு குற்றத்துக்கான மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையரான அனோஜனை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது.
அவரை விடுதலை செய்யும் நடவடிக்கையில் தலையீடு செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சவுதி அரசிடம் வலியுறுத்தினார். அதற்கமைய அனோஜன் சிவராசா சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் மத நிந்தனை குற்றச்சாட்டில் இருந்து அனோஜன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் பௌத்த நாடான இலங்கையில் ஞானசார தேரர் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். ஞானசார தேரரை விடுதலை செய்ய ஜனாதிபதி சாதகமான முடிவை எடுக்க வேண்டும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |