வனவளத் திணைக்கள அதிகாரியின் அவமதிப்பு செயல்! அரசாங்க அதிபர் அதிரடி
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு குறித்த ஓர் அதிகாரியை அனுப்பி வைக்க வேண்டாம் என வனவளத் திணைக்களத்திற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கடிதம் மூலம் அறிவுறுத்தல் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (04) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வன வள திணைக்களத்தின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பு உத்தியோகத்தர் விடுமுறை என்பதால் பதில் கடமை உத்தியோகத்தர் ஒருவர் கலந்து கொண்டு இருந்தார்.
அலட்சிய பதில்
இவ்வாறு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட உத்தியோகத்தர் சில கேள்விகளுக்கான பதிலை அலட்சியத்துடன் தெரிவித்ததோடு, அரசாங்க அதிபர்,பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் அலட்சியத்துடன் பதில் வழங்கியுள்ளார்.

குறித்த உத்தியோகத்தர் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர் என்பதால் சிங்கள மொழியில் அலட்சியத்துடன் கதைத்துள்ளார். இதனால் ஒருங்கிணைப்பு குழு பிரதிநிதிகள் அவரின் கருத்தினால் விசனமடைந்ததோடு, அனைவரும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சில நிர்வாக விதிமுறையை மீறி முசலிப் பிரதேச செயலாளருக்கு எதிராக அண்மையில் ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்றும்,மடு வீதி புனரமைப்பின் போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களை கைத் துப்பாக்கி காட்டி அச்சுறுத்தியவர் என்பதால் சபையில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என கடுமையான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
அரச அதிகாரியை இடைநடுவில் வெளியேற்றுகின்றமையைத் தவிர்த்து இனி வரும் நாட்களில் இந்த உத்தியோகத்தரை அனுப்ப வேண்டாம் என உரிய திணைக்களத்திற்கு கடிதம் அனுப்புவதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளரான மாவட்டச் செயலாளர் குறித்த கூட்டத்தில் வைத்து தெரிவித்திருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |