ஜோ பைடனின் உத்தரவு! சிரிய மற்றும் ஈராக் போராளிகள் மீது அமெரிக்கா அதிரடி வான்தாக்குதல்
ஈராக் மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு எதிராக நேற்றைய தினம் மற்றொரு சுற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈராக்கில் அமெரிக்க பணியாளர்கள் மற்றும் நிலையங்களுக்கு எதிராக போராளிகள் முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க இராணுவம் சிரியாவில் இரு இடங்களிலும், ஈராக்கில் ஒரு இடத்திலும் செயற்பட்டு வந்த போராளிகளின் ஆயுத சேமிப்பு நிலையங்கள் குறிவைத்ததாக அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
எனினும் தாக்குதல் காரணமாக யாராவது உயிரிழந்தார்களா அல்லது காயமடைந்தார்களா என்பது தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடவில்லை.
ஆனால் பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய ஆய்வகம் அமெரிக்காவின் அண்மைய தாக்குதலில், குறைந்தது ஐந்து போராளிகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
அதேநேரம் சிரியாவின் அரசு நடத்தும் சனா செய்தி நிறுவனம், ஒரு குழந்தை கொல்லப்பட்டதாகவும், குறைந்தது மூன்று பேர் காயமடைந்ததாகவும் கூறியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வழிகாட்டுதலின் பேரில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஐந்து மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற பின்னர் ஈரான் ஆதரவுடைய போராளிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் நடவடிக்கைக்கு அவர் இரண்டாவது முறையாக இதன்மூலம் உத்தரவிட்டுள்ளார்.
பெப்ரவரி மாதம் சிரியாவில் ஒரு இலக்குக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட குண்டுவெடிப்பை நடத்த பைடன் இறுதியாக இறதியாக உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.