சூடுப்பிடிக்கும் பொதுத்தேர்தல்: ரணில் ஆதரவாளர்கள் எடுக்கவுள்ள அதிரடி தீர்மானம்!
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wicremesinghe) ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் குழுக்களும் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று (26) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பில் அரசியல் கூட்டணி தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும், இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற தேர்தல்
மேலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் மற்றும் சின்னம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, கூட்டணி அமையுமாயின் அதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த சிறி லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்கும் இடையில் இன்று மாலை 4.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |