ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சி - இலங்கை குறித்து வெளியான அறிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு பதவிக்கு வந்தால் நாட்டில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி அடையும் என்றும் டொலரின் பெறுமதி மற்றும் பங்குச் சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்படலாம் என கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்திருந்தது.
எனினும் நேற்றைய தினம் டொலருக்கெதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய மாற்றம் இன்றி காணப்படுவதுடன் பங்குச்சந்தையும் சீரான நிலையில் காணப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (25.09.2024) நாணயமாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 307.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பொருளாதாரக் கொள்கைகள்
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் நாட்டின் சீர்திருத்த நடவடிக்கைகளின் போக்கை கணிசமான அளவில் மாற்றாது என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் உருவாகியுள்ள புதிய சூழல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு சர்வதேச முதலீடு மற்றும் கடன் தர நிர்ணய சேவையான மூடிஸ் தெரிவித்துள்ளது.
ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் கட்டமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பெரிய பொருளாதாரக் கொள்கைகள் பெரிதாக மாறாது என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி ஸ்திரத்தன்மை
எவ்வாறாயினும், சில கொள்கை முன்னுரிமைகளை மீட்டமைக்கும் போது நிதி ஸ்திரத்தன்மையை பராமரிப்பது சவாலானதாக இருக்கலாம் என்று நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. இது மேலும் அதிக கடன் அபாய வகைப்பாடுகளுக்கு வழிவகுக்கும்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொருளாதார மாற்ற சட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார மற்றும் நிதி சீர்திருத்த இலக்குகளை புதிய சட்டம் அல்லது திருத்தம் மூலம் மாற்ற முடியாது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஆட்சேபனை இல்லை எனவும் மூடிஸ் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |