கொழும்பில் நுகர்வோர் அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை
அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகார சபையினால் இன்று (02) கொழும்பு கோட்டை பகுதியில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அங்கு, கட்டுப்பாட்டு விலைக்கு மேல் கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படும் இடங்கள், கீரி சம்பா அரிசி கையிருப்பு மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓகஸ்ட் 02 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி கீரி சம்பாவிற்கு அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாக விதிக்கப்பட்டிருந்தது.
சட்ட நடவடிக்கை
இதனால் நாடளாவிய ரீதியில் கடைகளில் கீரி சம்பா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், சில வர்த்தகர்கள் கீரி சம்பாவை கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் விற்பனை செய்து வருவதாகவும், ஆகையால் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு விற்பனை செய்யும் இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.