யாழில் சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த ரஜீவன் எம்பி அவரச கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகள் தீவிரத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில், பல குழுக்கள் தற்போது சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன என்பதை நான் கவனித்துள்ளேன்.
அப்பாவி மக்களின் பாதுகாப்பு
குறிப்பாக போதைப்பொருள் விற்பனை மிகுந்த அளவில் நடைபெற்று வருகிறது. இந்த போதைப்பொருள் விற்பனையிலிருந்து பெறப்படும் பணம், சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதுடன், மீட்டர் வட்டி வணிகம், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, குழுச் சண்டைகள் போன்ற குற்றச் செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்செயற்பாடுகள் தற்போது பொது இடங்களிலும் சந்தைகளிலும் பரவலாக நடைபெறுவதால், அப்பாவி மக்களின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் விளைவாக பாலியல் வன்முறை, கொலைகள், தற்கொலைகள் மற்றும் பல உளவியல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
எனவே, இவ்வாறான குற்றச் செயற்பாடுகளை தடுக்க உடனடி விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சட்டவிரோத பணம்
குறிப்பாக, இக்குழுக்களுடன் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் மற்றும் வருமான மூலங்களை விசேடமாக கண்காணித்து, சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட பணம் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
இந்த நடவடிக்கைகள் வடக்கு மக்களின் பாதுகாப்பையும் சமூக நலனையும் உறுதிப்படுத்தும் என்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன்.
இது இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து காப்பாற்றவும், சமூகத்தில் அமைதி மற்றும் நம்பிக்கையை நிலைநாட்டவும் உதவும்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |