இஷாரா தப்பிச் செல்ல நிதியுதவி வழங்கிய நபர்! விசாரணையில் வெளியான தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபரான இஷார செவ்வந்தி, மித்தெனிய பிரதேசத்திற்கு தப்பிச் செல்ல, மத்துகம ஷான் என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் நிதி உதவி செய்ததாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று (24.10.2025) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.
குறித்த கொலையின் 15 ஆவது சந்தேகநபரான இஷார தப்பிச் செல்ல உதவியதாகக் கூறி கடந்த வாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் சந்தேகநபர்களை திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதன் மூலம் கொழும்பு குற்றவியல் பிரிவு இதனைத் தெரிவித்தது.
நீதிமன்றில் முன்னிலை
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேகநபர்களை பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள் ஸ்கைப் தொழிநுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
அதன்படி, குறித்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, கொழும்பு குற்றவியல் பிரிவு சார்பில் முன்னிலையான விசாரணை அதிகாரி, விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
15 ஆவது சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் விசாரணையின் போது வெளிவந்த உண்மைகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
கையடக்கத் தொலைபேசிகள்
அதன்படி, 7 ஆவது சந்தேகநபரின் வீட்டின் தோட்டத்தில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் அது தொடர்பில் தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு குற்றவியல் பிரிவு சார்பில் முன்னிலையான அதிகாரி, 23, 24, 25, மற்றும் 26 ஆவது சந்தேகநபர்கள் இஷாராவுக்கு தப்பிச் செல்ல உதவியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, மருத்துவமனை ஊழியராகப் பணியாற்றிய 23 ஆவது சந்தேகநபரான தொன் பிரியங்கா என்பவர் இஷாரா செவ்வந்தியை மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக அவர் கூறினார்.
24 ஆவது சந்தேகநபரான காவல்துறை பரிசோதகராக பணியாற்றிய சமோத என்பவர் இஷாராவை அந்த வீட்டில் இருந்துள்ளதுடன் ஒரு அரசாங்க அதிகாரி என்ற முறையில், சந்தேகநபரைப் பற்றிய தகவல்களை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
சந்தேகநபர் வேண்டுமென்றே தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்காமல், இஷாராவுக்கு தப்பிச் செல்ல உதவியதாக விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
23 ஆவது சந்தேகநபரின் வீட்டில் இஷாரா, சுமார் ஒரு நாள் தங்கியிருந்ததாகவும், பின்னர் 25 ஆவது சந்தேகநபரான சஜித் தினூஷ என்ற வர்த்தகர், இஷாராவை வெலிபென்ன பகுதியில் உள்ள அவரது வீட்டில் 52 நாட்கள் தங்க வைத்திருந்ததாகவும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
காரில் சென்ற இஷாரா
பின்னர், 26 ஆவது சந்தேக நபரான ரேணுகா சாந்தி மற்றும் அவரது கணவர், 27 ஆவது சந்தேகநபரான ஆனந்த உபாலி ஆகியோர், இஷாராவை மாத்தறை பகுதிக்கு கார் ஒன்றில் அழைத்துச் சென்று, பின்னர் மித்தெனிய பகுதியில் உள்ள அவர்களின் வீட்டில் தடுத்து வைத்ததாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு தப்பிச் செல்வதற்கான பணம் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த மத்துகம ஷான் என்பவாரால் வழங்கப்பட்டதாகவும் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பு குற்றவியல் பிரிவு சார்பில் முன்னிலையான விசாரணை அதிகாரி, 26 ஆவது சந்தேகநபரும் 27 ஆவது சந்தேநபரும் இஷாரா செவ்வந்தியை காரில் மாங்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்று, பின்னர் கிளிநொச்சிக்குச் சென்று யாழ்ப்பாணம் வழியாக தப்பிச் செல்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
27 ஆவது சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தற்போது கொலை வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் உள்ளதாகவும், அடுத்த நீதிமன்றத் அமர்வில் அவர் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் விளக்கமறியல்
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதால், குறித்த சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணை அதிகாரி நீதிமன்றத்தைக் கோரினார்.

உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதிபதி, 15 ஆவது சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை தப்பிச் செல்ல உதவியதற்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்களை நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 7 ஆவது சந்தேகநபரான தமித் அஞ்சன நயனஜித் என்பவரை பிணையில் செல்ல அனுமதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |