இலங்கையிலிருந்து வெளியேறிய அதானி : அநுர அரசை கடுமையாக சாடிய மனோ எம.பி
அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) நிறுவனம் இலங்கையில் இருந்து வெளியேறியமையானது இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்று விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
நேற்று (01) நாடாளுமன்றில் உரையாற்றிய போதே மனோ கணேசன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”அதானி கிரீன் எனர்ஜி- சிறிலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய (India) மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை- இந்திய மின் சுற்றுகள் இணக்கப்பட இருந்தன.
இந்த பெருந்திட்ட மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இந்திய சுற்றுடனான தொடர்பு இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் மற்றும் பராமரிக்கும், பாரிய பொறுப்புகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் ஏற்று இருந்தது என்பதை மறவாதீர்கள். அதுதான் முழு திட்டம். அதை புரிந்துகொள்ள இன்றைய இலங்கை அரசு தவறி விட்டது.” என தெரிவித்தார்.
Exit of #Adani_Green_Energy has sent wrong signals to the world: I made reference to this subject in @ParliamentLK y'day.
— Mano Ganesan (@ManoGanesan) March 2, 2025
You didn't drop Adani. The truth is Adani dropped you. Adani project is not just producing energy for the SriLankan grid but energy export to Indian grid.… pic.twitter.com/bxE3r4pLwM
இந்த விடயம் குறித்து நேற்று (01) நாடாளுமன்றில் உரையாற்றிய மனோ கணேசன் இன்று (02) தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அதானியை நீங்கள் வெளியேற்றவில்லை. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் உங்களை விட்டு வெளியேறி விட்டது. இது இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்றும் விட்டது.
இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் மின்சாரம்
இது தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றினேன். இலங்கை-இந்திய மின் சுற்று மூலம், இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை மின்சாரம் இலங்கைக்கு கொண்டு வரும் வருமானம் மூலம் இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க முடியும்.
எதிர்காலத்தின் மீது கண் வைத்து தீர்மானம் எடுக்க தவறி விட்டீர்கள். அதானியின், யுனிட் விலை தொடர்பில் பிரச்சினை இருக்கும் போது, அதை பேசி தீர்த்து இருக்கலாம்.
மறுபுறம், இந்த சம்பவம், இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்றும் விட்டது. சமீபத்தில், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று வந்தார். அங்கே என்ன நடந்தது? அங்கிருந்து ஏதாவது, முதலீடுகள் வருகின்றனவா?
இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்காளர்களுடன்தான் வருவார்கள். மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையை நோக்கி முதலீட்டாளர்கள், இந்தியாவை “பைபாஸ்” செய்து வருவார்கள் என நினைக்கிறீர்களா?" என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
