தமிழர் பகுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம் - உறுதியளித்தார் அதானி
மன்னார் மற்றும் பூநகரியில் உருவாக்கப்படவுள்ள 500 MW மெகாவாட் சோலார் மற்றும் காற்றாலை திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னதாக குறித்த திட்டத்திற்கான வேலைத்திட்டங்களை முடிக்க கௌதம் அதானி உறுதியளித்துள்ளார், என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (22) தெரிவித்தார்.
இந்தியாவில் நேற்று (21) அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவுடனான சந்திப்பின் போதே அதானி இந்த உறுதிமொழியை வழங்கியதாக அமைச்சர் கூறினார்.
ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது
இந்த விஜயத்தின் போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு மற்றும் திருகோணமலை எரிசக்தி மைய அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் NTPC இந்தியாவின் கூட்டு முயற்சியினால் சம்பூர் சோலார் பூங்காவிற்கான சக்தி வழங்கல் அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், இந்தியா-இலங்கை கிரிட் இணைப்பு,பசுமை ஹைட்ரஜன் திட்டம், எண்ணெய் குழாய் இணைப்பு மற்றும் எரிசக்தி துறை முதலீடுகள் குறித்த கலந்துரையாடல் நேற்று(21) இடம்பெற்றது.
புதுடில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் திரௌபதி முர்மு, மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்ட விடயங்கள் பேசப்பட்டதாக அமைச்சர் கூறினார்.