சூரியனை ஆய்வு செய்ய தயாராகிறது ஆதித்யா எல் 1 -இன்றுமுதல் ‘கவுண்டவுன்’ ஆரம்பம்
சந்திரயான்3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிறுத்தி வெற்றி கண்ட இந்திய விஞ்ஞானிகள் தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்ப தயாராகி உள்ளனர்.
இதன்படி குறித்த விண்கலத்தை அmனுப்புவதற்கான கவுண்டவுன் இன்றுமுதல் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
நாளை சனிக்கிழமை (2ஆம் திகதி) காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி57 ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.
கவுண்டவுன் இன்று முதல்
இந்நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்புவதற்கான கவுண்டவுன் இன்று முதல் தொடங்குவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்ப தயாராகி வருவதாக தெரிவித்தார்.
நன்றாக வேலை செய்யும் சந்திரயான் 3
அத்துடன் சந்திரயான் 3 நன்றாக வேலை செய்கிறது என்றும் திட்டமிட்டப்படி அனைத்து தரவுகளும் நன்றாக வருவதாகவும் சோம்நாத் தெரிவித்தார். மேலும் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய 14 ஆம் நாளில் அதன் திட்டம் நிறைவடையும் என்றும் சோம்நாத் தெரிவித்தார்.
ஆதித்யா எல்1 விண்கலம் நான்கு மாதங்கள் பயணம் செய்து 15 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியை அடையும். அதன்பிறகு தொடர்ந்து சூரியன் குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல்1 மிஷன் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.