சஹ்ரானின் மனைவி மீதான வழக்கு விசாரணை - நீதிபதி விடுத்துள்ள உத்தரவு!
ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஷி முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா பகிரங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபரிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சிங்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையால், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு அவசியம் என மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
