நெருக்கடி தீர அரசாங்கத்திற்கு ஆலோசனை
இலங்கை மக்களின் விருப்பங்களை அரசாங்கம் செவிசாய்க்காவிடின் நாட்டில் கலவரம் ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும், அந்தக் கலவரத்தை அடக்குவதற்கு இராணுவத்தையே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்துவார் எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி எச்சரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தேர்தல் ஒன்றே நாட்டின் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரே வழி எனக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“ தேர்தல் நடத்தப்படும் வரை, மக்கள் நம்பிக்கையை பெறும் வரை இந்தச் சபையின் உறுப்பினர்கள் வீதியால் செல்ல முடியாது. இன்று ஒன்றிணைந்த எதிர்கட்சி என்பது சவாலானது.
நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்களே பொருளாதாரத்திற்கு ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கின்றனர்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த போது, அதில் அங்கம் வகித்த குறைந்தது அரைவாசிப் பேரை கொண்டே அரசாங்கத்தை அமைக்க முடியும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்ற குற்றவாளிகளை கொண்டு எவ்வாறு ஆட்சி நடத்த முடியும் ?
தேர்தல் ஒன்றை நடத்தாமல் அரசாங்கத்தை அமைக்க முடியாது. அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். தேர்தலை எவ்வளவு தூரம் பிற்போடுகின்றீர்களோ அந்த அளவிற்கு நாட்டின் அரசியல் நிலைமை மேலும் மோசமாகும்.
இந்தச் சபையானது மக்களின் விருப்பதை பிரதிநிதிதித்துவம் செய்யாத காரணத்தால் கலவரம் வெடிக்கும் நிலைமை உருவாகும்.
தற்போதும் கூட இராணுவத்தினரை அமைச்சுக்கும் அமைச்சின் செயலாளர்களாகவும் நியமிப்பதில் அரச தலைவர் தற்போதும் ஆர்வம் காட்டுகின்றார். இந்த நிலையில் கலவரம் வெடிக்குமாயின், மக்களின் குரலுக்கு செவிசாய்க்காத அரசாங்கம் இராணுவத்தையே பயன்படுத்தும்.
அதுவே நடைபெறப் போகின்றது. அரச தலைவரும் இந்த அரசாங்கமும் அதனை நோக்கியே தள்ளுகின்றது” என்றார்.

