விமான பயணங்களை ஆரம்பிக்க இலங்கையிடம் உறுதிமொழியை கேட்கும் ரஷ்ய நிறுவனம்
ஏரோஃப்லோட் விமான நிறுவனம் இலங்கைக்கான விமான பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாயின் ரஷ்யாவின் விமானம் ஒன்று மீண்டும் தடுத்து நிறுத்தி வைக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசின் உறுதிமொழி அவசியம் என அந்த விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தரப்பில் இருந்து கிடைக்கும் உறுதிமொழியின் அடிப்படையில், கொழும்பு - மொஸ்கோ இடையில் மீண்டும் விமான பயணங்களை ஆரம்பிக்க தாம் விருப்பத்துடன் இருப்பதாக விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனிதா அபேவிக்ரம லியனகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட விமானம்
ரஷ்ய விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டது.
இதன் காரணமாக ஏரோஃப்லோட் நிறுவனம் இலங்கைக்கான விமான பயணங்களை மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இடைநிறுத்தியது.இந்த பிரச்சினை இலங்கை - ரஷ்யா இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விமான நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வர மிகவும் சிரமப்பட்டு பணியாற்ற நேரிட்டதாக ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் கூறியுள்ளார்.

