தலிபான்களின் அமைச்சவையை ஏற்க முடியாது - ஆப்கான் தூதர் அதிரடி அறிவிப்பு
தலிபான்களின் இடைக்கால அமைச்சவையை ஏற்றுக்கொள்ள முடியாதென கொழும்பிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவுக்கான ஆப்கானிஸ்தானின் தூதவர் அஷ்ரப் ஹய்தாரி, இதுகுறித்த விளக்கக் கடிதமொன்றை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும், கொழும்பிலுள்ள இதர இராஜதந்திரிகளுக்கும் அனுப்பியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் 20 வருடப் போராட்டத்தின்பின்னர் கைப்பற்றியிருக்கின்ற நிலையில், கொழும்பிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹய்தாரி, தலிபான்களின் இடைக்கால அமைச்சவையை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கடிதமொன்றை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் அதேபோல கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களுக்கும் அவர் அனுப்பிவைத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ள ஆப்கானிஸ்தானின் தூதவர்கள் எவரும் தற்போதைய தலிபான்களின் இடைக்கால அமைச்சரவையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தான் நம்புவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தலிபான் அமைச்சரவையும், அதற்குத் தலைமை வகிக்கும் தலைவரையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் அனைவரும் தீவிரவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும், இஸ்லாமிய ஆட்சியில் பெண்கள் மற்றும் இனப்பிரிவு, மதம் மற்றும் சிறுபான்மையினத்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவர்கள் எனவும் கொழும்பிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹய்தாரி கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் உலகம் முழுவதிலும் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதரகங்கள் வழமைபோலவே இயங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தூதுவரது இந்த அதிரடி கருத்துக்கள் பற்றி ஸ்ரீலங்கா அரசாங்கம் அல்லது ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு இதுவரை எந்த பதில் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது