ஆப்கனிலிருந்து தப்பியோடிய பேராசிரியர்களுக்கு தலிபான்கள் விடுத்துள்ள அழைப்பு
வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பேராசிரியர்கள், ஆப்கானிஸ்தான் நாட்டின் நலன் கருதி நாடு திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
கொடூர தண்டனைகள், குற்றங்களுக்கு பெயர் போன தலிபான்கள் தற்போது தூதரக ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மீது முன்பு இருந்த உள்நாட்டு எதிர்ப்புகள் குறையத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், ஆப்கன் அரசு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
அனைத்து இன மக்களுக்கும் ஆப்கானிஸ்தான் பொதுவான நாடாக உள்ளது. ஆப்கனின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் பொறுப்பு. நாட்டில் வளம் இல்லாத காரணத்தால் கல்வியில் பின் தங்கியுள்ளோம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச் சென்ற அனைத்து பேராசிரியர்களும் நாடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். நாட்டின் கல்வி வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம் உள்ளிட்டவற்றின் மீது அக்கறை கொண்டு பேராசிரியர்கள் ஆப்கன் திரும்ப வேண்டும். அவர்களின் தியாகத்தால் ஆப்கானிஸ்தான் முன்னேறும்.
இவ்வாறு நாடு திரும்பும் பேராசிரியர்களுக்கு தேவையான அனைத்து பொருளாதார உதவிகளையும் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
