காபூல் விமான நிலையத்தில் மோதல்- தலிபான்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் விமான நிலையத்தின் வடக்கு வாயில் பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளுடன் இடம்பெற்ற மோதல்களில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தலிபான்களின் பிடியில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்தில் ஒன்றுதிரண்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்துடன் காபூலில் சிக்கியுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் ஆயுததாரிகளுடன் இடம்பெற்ற மோதலில் ஜேர்மன் மற்றும் அமெரிக்கப் படையினரும் பங்குபற்றியுள்ளனர். இந்த மோதலில் மூவர் காயமடைந்துள்ளதாக ஜேர்மன் இராணுவத்தின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகரை கடந்த 15 ஆம் திகதி தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து விமான நிலையத்தின் ஊடாக நாட்டில் இருந்து தப்பிச் செல்வதற்கு ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் முயற்சி செய்துவருகின்றனர்.
எனினும் ஆப்கானிஸ்தானில் உள்ள தமது நாட்டு இராஜதந்திரிகளையும் மக்களையும் வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் முன்னுரிமை வழங்கி செயற்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 28 ஆயிரம் பேரை காபூலில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். எனினும் இறுதிக்காலக்கெடுவான எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதியை தாண்டியும் காபூலில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களை ஜோ பைடன் எதிர்நோக்கியுள்ளார்.
இந்த காலக்கெடுவை நீடிப்பது தொடர்பில் ஏனைய நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிவருவதாகவும் அதற்கான தேவை எழாது என்பதே தமது நம்பிக்கை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் முன்னெடுக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
அதன்பின்னரும் வெளிநாட்டுப் படையினர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருப்பார்கள் ஆயின், அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக கருதப்படுவார்கள் எனவும் அதனால் பாரிய பின்விளைவுகள் ஏற்படும் எனவும் தலிபான்களின் பேச்சாளர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் காபூலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்கப் படையினரின் பிரச்சன்னத்தை நீடிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம், ஜி 7 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.