சர்வதேச சமூகத்தால் தீண்டத்தகாத நாடாக மாறிவிடும்- எச்சரித்துள்ள அமெரிக்கா!
தமது படைப்பலத்தால் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அந்த நாடு சர்வதேச சமூகத்தால் தீண்டத்தகாத ஒரு நாடாக மாறிவிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள தலிபான்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, தமது சர்வதேச கடப்பாடுகள் தொடர்பில் உறுதிமொழியையும் வழங்கியுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன், ஆப்கானிஸ்தான் விடயத்தில் சீனாவின் பங்குபற்றுதல் என்பது சாதகமான ஒரு விடயமாக இருக்கும் என கூறியுள்ளார். சீனா எதிர்பார்க்கும் விடயங்களில் மோதல்களுக்கு அமைதி தீர்வு மற்றும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய மற்றும் உண்மையான பிரதிநிதித்துவம் இருக்குமாயின் அது சாதகமான ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலிபான்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று சீனாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் சமாதான செயற்பாடுகள் மற்றும் நாட்டை கட்டியெழுப்பும் விடயங்களில் தலிபான்கள் முக்கிய பங்கை வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் தம்வசப்படுத்துவதையும் இஸ்லாமிய இராஜ்ஜியமாக மாற்றப்படுவதையும் யாரும் விரும்பவில்லை எனவும் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே தலிபான்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பி, சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஒன்பது பேரடங்கிய தலிபான்களின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, பேச்சுக்களை நடத்துவதற்காக சீனாவின் ரியாங் ஜியாங் நகருக்கு விஜயம் செய்திருந்தனர்.
இந்தப் பேச்சுக்களின் போது ஆப்கானிஸ்தானுக்கு தொடர்தும் தமது உதவிகள் வழங்கப்படும் என சீனா உறுதி அளித்ததாக தலிபான்களின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஆப்கானிஸ்தானின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது என்ற போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கும் உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையையே தாம் தொடர்ந்தும் பின்பற்றுவதாக சீன வெளிவிவகார அமைச்சும் குறிப்பிட்டுள்ளது.