தாலிபான்களிடையே அதிகார யுத்தம்- துணைப் பிரதமர் கொலை?
தாலிபான்களின் துணைப் பிரதமர் முல்லா அப்துல் பரதார் கருத்துவேறுபாடு காரணமாக தாலிபான்களாலையே கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் தங்களிடையே எவ்வித கருத்துவேறுபாடுகளும் இல்லை எனவும் முல்லா பரதார் ஆப்கானிஸ்தான் எதிர்காலம் தொடர்பிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தலிபான்களின் முக்கிய தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் துணைப் பிரதமர் முல்லா பரதார் நலமாக இருப்பதாக கூறி, அவரே பேசியதாக ஒரு குரல் பதிவும், கைப்பட எழுதியதாக கூறி ஒரு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளதோடு, ஊடகங்களே தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் தாலிபான்கள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே தாலிபான்கள் தங்களின் புதிய அரசாங்கம் தொடர்பில் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டு, அதில் முல்லா பரதார் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழுந்ததாக கூறப்படுகிறது. மேலும், தாலிபான்களின் நிறுவன உறுப்பினர்களுக்கும் ஹக்கானி குழுவினருக்கும் இடையே கருத்து மோதலால் முல்லா பரதார் முக்கிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
மேலும், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்னர் முதன்முறையாக கட்டார் நாட்டில் இருந்து வெளிவிவகார அமைச்சர் உட்பட் முக்கிய அதிகாரிகள் குழு காபூல் நகருக்கு விஜயம் செய்த நிலையில், அந்த சந்திப்பில் துணைப் பிரதமரான முல்லா பரதார் பங்கேற்கவில்லை என்பதே அவர் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை வலுவடைய செய்துள்ளது.
ஆனால், கட்டார் அமைச்சர்கள் குழுவினருடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பில் ஹக்கானி குழு தலைவர்களில் மூவர் ஆப்கான் அமைச்சர்கள் தரப்புடன் கலந்து கொண்டுள்ளதும் முல்லா பரதார் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. முல்லா பரதார் தாலிபான்களின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமின்றி, தாலிபான்களின் முதல் உச்ச தலைவரான முல்லா உமருக்கு துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
2013ல் காசநோய் காரணமாக முல்லா உமர் மரணமடைய, தாலிபான்களின் அரசியல் பிரிவின் தலைவராக பரதார் பொறுப்பேற்றார். ஆனால் ஹக்கானி குழுவினருடன் எப்போதும் ஒரு மோதல் போக்கையை முல்லா பரதார் கொண்டிருந்தார் என கூறப்படுகிறது.
தாலிபான்கள் தங்களின் முக்கிய எதிரியாக பார்க்கப்படும் ஐ.எஸ் கோராசன் பிரிவினருடன் ஹக்கானி குழு நெருக்கமாக இருப்பதே இதற்கு முதன்மை காரணமாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலானது ஹக்கானி குழுவினரின் தூண்டுதலால் ஐ.எஸ் கோராசான் பிரிவு முன்னெடுத்ததாகவே பரவலாக பேசப்படுகிறது.