விடுதலைப் புலிகளுக்கு பின்னரான மிகப்பெரிய அச்சுறுத்தல்: கம்மன்பில பகிரங்கம்!
விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பின்னர் தற்போதைய அரசாங்கத்தில் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மனபில குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று (27.10.2025) நடைபெற்ற மக்கள் குரல் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம், பொது மக்களின் வாழும் உரிமையை பறித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் உரிமை
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “லசந்த விக்ரமசேகர வழக்குகளின் சந்தேகநபர் மாத்திரமே. சந்தேகநபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு கூட இல்லை.

இலட்சம் பேரை கொன்றாவது நாங்கள் ஆட்சியை நிலை நிறுத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருந்ததை அவதானித்தோம்.
அந்த இலட்சம் பேரினுள் முதலாவது நபர் இந்த பிரதேச சபைத் தலைவர் “லசந்த விக்ரமசேகரவா“ என தற்போது பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இன்று இலங்கை காவல்துறையினர், ஹிட்லரின் காவல்துறையினரைப் போல பணியாற்றி வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.
பொதுப் பேரணி
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரமாண்டமான பொதுப் பேரணி எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நுகேகொட பிரதேசத்தில் “மக்களின் குரல்” என்ற தொனிப்பொருளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்கும் வகையில் இன்று (27.10.2025) குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றதுடன் போராட்டத்தில் கலந்துக் கொள்ள அனைத்து மக்களுக்கும் இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 30க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இந்த “மக்களின் குரல்” பொதுப் பேரணியில் இணையவுள்ளதாகவும் இதன்போது உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்