அரசாங்கத்திற்கு எதிரான கூட்டத்தில் இன்னும் சிலர் - நடவடிக்கை எடுக்க தீர்மானம்
இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து எதிர்வரும் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கட்சிக் கூட்டத்தில் இது அவசியம் எனக் கருதினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் நடைபெற்ற அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து விமல் வீரவங்ச உதய கம்மன்பில ஆகியோர் உரையாற்றி இருந்தனர்.
அதேவேளை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் பங்காளி கட்சிகளின் அமைச்சர்களை அழைக்காது, பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களை மாத்திரம் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தி இருந்தார்.
இந்தப் பின்னணியில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சர் பதவிகளில் இருந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நீக்கியிருந்தார்.
இந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிரான ஒரு கூட்டமாக கருதப்படும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றமை தொடர்பிலேயே இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
