மானிய விலையில் தேயிலை உரம் வழங்க விவசாய அமைச்சு தீர்மானம் ! கைச்சாத்திடப்படவுள்ள ஒப்பந்தம்
தேயிலை செய்கையின் விளைச்சலை அதிகரிக்க மானிய விலையில் தேயிலை உரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாளை (29) பத்தரமுல்ல விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
லங்கா உர நிறுவனமும், வர்த்தக உர நிறுவனமும், தேயிலை சபை, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையுடன் உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
50 வீதத்தால் குறைக்கப்படும்
அதன்படி, தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து T-750, T-709 மற்றும் T-200 உரங்களின் விலையை 2000 ரூபாவினால் குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.
உரத்தின் விலை தற்போதைய சந்தை விலையில் இருந்து 50 வீதத்தால் குறைக்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால், T-750 மற்றும் T-709 உர மூடையின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேராவிற்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |