எயார் இந்தியா விமானத்தில் கோளாறு : இறுதி நேரத்தில் இறக்கி விடப்பட்ட பயணிகள்
டெல்லி (Delhi) விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் (Singapore) நோக்கிப் பயணிக்கவிருந்த எயார் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிங்கப்பூருக்கு நேற்று (10) இரவு 11 மணியளவில் 200 பயணிகளுடன் பயணிப்பதற்காகத் தயாராக இருந்த குறித்த விமானத்தில் திடீரென தொழிநுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
விமானத்தின் குளிரூட்டி அமைப்பு மற்றும் மின்சாரம் செயலிழப்பினால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி இருந்தனர்.
பயணிகள் அவதி
சுமார் 2 மணி நேரம் முயற்சித்தும் விமானத்தில் ஏற்பட்ட மின் விநியோகத் தடையைச் சரி செய்ய முடியாததால் பயணத்தை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
இந்தநிலையில் விமானத்தில் இருந்த 200 பயணிகளும் இறக்கி விடப்பட்டு விமான நிலைய கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதேவேளை பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று எயார் இந்தியா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
