கனடாவில் கடைசி நேரத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானி
கனடாவில் இருந்து இந்தியா புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கவேண்டிய விமானியிடம் இருந்து மது வாசனை வந்ததால் அந்நாட்டு அதிகாரிகள் அவரை பிடித்து வைத்தனர். இச்சம்பவம் கடந்த மாதம் டிசம்பர்23 ம் திகதி நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து டில்லிக்கு வர இருந்த விமானத்தை அந்த விமானி இயக்க இருந்தார். விமான நிலையத்தில் இருந்த கடை ஒன்றில்,அவர் மதுபானம் வாங்கிய போது அல்லது அருந்தியதை பார்த்த ஊழியர் ஒருவர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
விமானியை பிடித்த கனடா அதிகாரிகள்
உடனடியாக அதிகாரிகள் அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் ப்ரீத் அனாலிசர் சோதனை நடத்தினர். அதில் அவர் தோல்வி அடைந்ததால், அவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
விமானியின் உடல் தகுதியில் சந்தேகம்
வான்கூவர் நகரில் இருந்து டில்லிக்கு வர வேண்டிய விமானம், கிளம்புவதில் கடைசி நேரத்தில் தாமதம் ஏற்பட்டது. விமானியின் உடல் தகுதியில் கனடா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து விசாரணைக்கு அவரை அழைத்து சென்றனர்.

பாதுகாப்பு வழிமுறைகளை கருத்தில் கொண்டு மாற்று விமானி மூலம் அந்த விமானம் இயக்கப்பட்டது. இதனால், பயணிகளுக்கு ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது. மேலும் அந்நாட்டு அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |