காற்றின் தரம் பாதிப்பு : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலே காணப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
எனினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என அந்த நிறுவனம் (NBRO) கணித்துள்ளது.
இன்று (28) வெளியிடப்பட்ட சுற்றுப்புற காற்றின் தர அறிவிப்பின்படி, பெரும்பாலான நகர்ப்புறங்களில் நுண் துகள்களின் (PM2.5) அளவு மிதமான மட்டத்தில் இருந்தது.
முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
இதேவேளை வவுனியா, நுவரெலியா, எம்பிலிபிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சீரான நிலையில் பதிவாகியுள்ளது.

இருப்பினும், அடுத்த 24 மணிநேரத்திற்கான முன்னறிவிப்பின்படி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல நகரங்களில் காற்றின் தரம் மிதமான மற்றும் சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கக்கூடும்.
எல்லை தாண்டிய காற்று மாசு காரணமாக, வடக்குப் பகுதியிலிருந்து வீசும் மாசடைந்த காற்றினால் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் காற்றின் தரம் சற்று ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்படலாம் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, பொதுமக்கள் இயன்றவரை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தியுள்ளதுடன், சுவாசப் பாதிப்பு உள்ளவர்கள் அல்லது உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |