பாகிஸ்தான் மீது நள்ளிரவில் இந்தியா தாக்குதல் - முடங்கிய விமான சேவைகள்
'ஒபரேஷன் சிந்தூர்' எதிரொலியாக வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் பகுதியில் உள்ள 9 இலக்குகளை குறி வைத்து இந்திய இராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர். கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இலக்கு வைக்கப்படவில்லை
பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம்.
பாகிஸ்தான் ராணுவ தளங்களின் மீது இலக்கு வைக்கப்படவில்லை எனவும் மிகவும் கவனத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
எனினும் இரு குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழுபேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
விமானங்கள் இரத்து
ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் விமான நிலையங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 'எயார் இந்தியா' விமானங்கள் இன்று மதியம் 12 மணி வரை இரத்து செய்யப்படுகின்றன.
அமிர்தர்சஸ் செல்லும் 2 சர்வதேச விமான நிலையங்கள் டெல்லிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன என்று 'எயார் இந்தியா' விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வட இந்தியாவில் தற்போது நிலவும் சூழல் காரணமாக தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்பந்தப்பட்ட விமான நிலையங்களுக்கு செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் 'ஸ்பைஸ்ஜெட்' விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன.
பயணிகள் தங்கள் பயணங்களை இதற்கேற்றவாறு திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 'இண்டிகோ' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழல் காரணமாக ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பைகானேர் மற்றும் ஜோத்பூர் ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் 'இண்டிகோ' விமானங்களின் சேவைகள் இன்று இரத்து செய்யப்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
